ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை
ரஷ்ய கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் உருவாக்கத்தில் பணியாற்றிய ஆண்ட்ரி போடிகோவ் என்பவர் மாஸ்கோவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வியாழன்(மார் 2) அன்று ரஷ்யாவில் உள்ள ரோகோவா தெரு குடியிருப்பில் பெல்ட்டால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இந்த விஞ்ஞானி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல்களின் படி, ஒரு நபர் விஞ்ஞானியின் வீட்டுக்குள் நுழைந்து பணம் தொடர்பாக தகராறு செய்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக 29 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்ய அதிபர் கையால் விருது பெற்றவர்
கைது செய்யப்பட்ட அந்த நபர், இதற்கு முன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையின் போது, கொலை செய்ததை குற்றவாளி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் விசாரணைக் குழு சந்தேக நபரை "மிக குறுகிய நேரத்தில்" பிடித்ததாகக் கூறியுள்ளது. போடிகோவின் உடல் கண்டெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கோவிட் தடுப்பூசிக்கு பணியாற்றியதற்காக இந்த விஞ்ஞானிக்கு 'ஆர்டர் ஆஃப் மெரிட் ஃபார் தி ஃபாதர்லேண்ட்' விருதை 2021ஆம் ஆண்டில் வழங்கினார். 2020ஆம் ஆண்டில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை உருவாக்கிய 18 விஞ்ஞானிகளில் போடிகோவும் ஒருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.