ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது. 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தாலும், இந்தியா மற்றும் சீனா உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து இதற்கு முன்பும் ஐ.நா அமைப்புகள் நிறைய தீர்மானங்களை இயற்றியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான இதேபோன்ற தீர்மானங்களுக்கு வாக்களிப்பதில் இருந்து சீனாவும் இந்தியாவும் விலகியே இருக்கிறது.
உலக நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டும்
ரஷ்யாவின் படையெடுப்புக்கு இந்தியா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அமைதியான வழியை தேர்ந்தெடுக்கும் படி இதற்கு முன் ரஷ்யாவிற்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது. ரஷ்யாவும் இந்தியாவும் மிகப்பெரும் நட்புறவை கொண்ட நாடுகளாகும். மேலும், இந்தியாவிற்கான ராணுவ ஆயுதங்களை சப்ளை செய்யும் மிகப்பெரும் நாடு ரஷ்யாவாகும். உக்ரைன் மற்றும் அதன் கூட்டாளிகளால் முன்மொழியப்பட்ட "உக்ரேனில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியின் அடிப்படையிலான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை UNGA ஏற்றுக்கொண்டது. உறுப்பினர்கள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோரியது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ், இந்தியா புறக்கணித்ததற்கான முக்கிய காரணமாக தீர்மானத்தின் "உள்ளார்ந்த வரம்புகளை" குறிப்பிட்டார்.