ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு
பல மாதங்களுக்கு பிறகு, உக்ரைனில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஒவ்வொரு வருடமும் மே 9ஆம் தேதியை ரஷ்யா வெற்றி நாளாக கொண்டாடி வருகிறது. 1945இல் 'நாட்சி' ஜெர்மனியை தோற்கடித்ததற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வெற்றி நாள் கொண்டாட்டத்தின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் நகரமான ஒடேசா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஸ் ட்ரோன்களை உக்ரைன் நகரங்களின் மீது ரஷ்யா வீசியதாக கீவ் நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். அதில் 36 ட்ரோன்கள் கீவ் நகரத்தின் மீது மட்டும் வீசப்பட்டது.
உக்ரைனில் மே 9ஆம் தேதிக்கு பதிலாக மே 8ஆம் தேதி வெற்றி தினம் கொண்டாடப்பட்டது
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து, 5 பேர் காயமடைந்தனர். ஒடேசாவில் உணவுக் கிடங்கு ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. அதனால், 3 பேர் காயமடைந்தனர். பல நாட்களாக ரஷ்யா தாக்குதலை நிறுத்தி வைத்திருந்ததால் உக்ரைனில் அமைதி நிலவி வந்தது. இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு ரஷ்யா நடத்தும் பெரும் தாக்குதல் இதுவாகும். உக்ரேனிய தலைவர் ஜெலென்ஸ்கி, மே 9ஆம் தேதிக்கு பதிலாக மே 8 ஆம் தேதி அன்று வெற்றி தினத்தைக் கொண்டாடலாம் என்று கூறினார். மேலும், மேற்கத்திய நட்பு நாடுகளின் நடைமுறைக்கு ஏற்றவாறு அந்த விடுமுறையின் தேதியை மாற்றினார். பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. தனது நாட்டை காப்பாற்றி கொளவதற்கு இந்த போரை ஆரம்பிப்பதாக ரஷ்யா அப்போது கூறியது.