27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா
காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அத்துறையின் துணை அமைச்சர் இலியா டெனிசோவ், "மாஸ்கோவிற்கு அருகிலுள்ள ராமென்ஸ்காய் விமான நிலையத்திலிருந்து எகிப்தின் எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் 27 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன". "ரஷ்யாவின் இந்த நிவாரண பொருட்கள் எகிப்தின் சிவப்பு பிறை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம் காஸாவிற்கு அனுப்பப்படும்" என்றார். "நிவாரண பொருட்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பாஸ்தா உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது" என டெனிசோவ் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு, 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை, அமெரிக்கா வழங்கும் என அதிபர் பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.