உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 11 பேர் பலி, வரலாற்றுச் சிறப்புமிக்க கீவ் கதீட்ரல் தீப்பற்றி எரிந்தது!
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் தீவிர ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழலில், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் உட்படப் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்ய ராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய வான்வழித் தாக்குதலை ஒரே இரவில் நடத்தியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் சிதைந்துள்ளதோடு, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைன் மக்களின் ஆன்மீக அடையாளமாகத் திகழும் 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கதீட்ரல் தேவாலயம் ஒன்று இத்தாக்குதலில் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 ஏவுகணைகள்
ஒரே இரவில் 70 ஏவுகணைகள் மற்றும் 611 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது ஒரே நாளில் 70 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், கிட்டத்தட்ட 611 தற்கொலைப்படை ட்ரோன்களையும் ஏவி ஒட்டுமொத்த உக்ரைனையும் அதிரவைத்துள்ளது. இதில் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் சமயோசிதமாகச் செயல்பட்டு 50 ஏவுகணைகளையும் 582 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், எஞ்சிய ஏவுகணைகள் மற்றும் உடைந்த ட்ரோன்களின் எரியும் பாகங்கள் தலைநகர் கீவ், கார்கிவ், டினிப்ரோ மற்றும் சுமி ஆகிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், சந்தைகள் மற்றும் மளிகைக் கடைகளின் மீது நேரடியாக விழுந்து பெரும் அழிவை ஏற்படுத்தின.
11 பேர் பலி
பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 11 பேர் பலி: 1.40 லட்சம் வீடுகளில் மின்சாரம் கட்
இந்தக் கொடூரமான வான்வழித் தாக்குதலில் நாடு முழுவதும் இதுவரை மீட்புக் குழுவினரால் 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 53 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் நகரில் மட்டும் ஐந்து பொதுமக்கள் தங்களின் உயிரை இழந்துள்ளனர். இதில் ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரு சிறு குழந்தைகளும் கடுமையான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏவுகணைகள் விழுந்த அதிர்வில் கீவ் நகரின் முக்கிய மின் விநியோகக் கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்ததால், நகரின் சுமார் 1,40,000 குடியிருப்புகள் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளதாகக் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான டோர்மிஷன் கதீட்ரல் தீக்கிரை
இந்தத் தாக்குதலின் மிக கொடூரமான அடையாளமாக, கீவ் நகரின் மையப்பகுதியில் உள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கீவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலய வளாகத்தில் அமைந்துள்ள டோர்மிஷன் கதீட்ரல் தேவாலயம் ரஷ்ய ஏவுகணை வீச்சில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, அதன் பிரம்மாண்டமான கூரை மற்றும் தங்கக் கோபுரங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்தத் தேவாலயம் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாட்டு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களாலும் மிகப்புனிதமான ஆன்மீக மையமாக வணங்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் மெட்ரோபாலிட்டன் எபிபானியஸ், இது மனிதநேயத்திற்கும், வரலாற்றிற்கும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ கலாச்சாரத்திற்கும் எதிராக ரஷ்யா செய்த மிகப்பெரிய குற்றம் என்று சாடியுள்ளார்.
ரஷ்யா மறுப்பு
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைதான் காரணம் என ரஷ்யா அதிரடி மறுப்பு
மறுபுறம், இந்தத் வரலாற்றுச் சின்னத்தின் மீதான தாக்குதலுக்குத் தான் காரணமல்ல என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களின் இலக்குகள் அனைத்தும் உக்ரைனின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கி மட்டுமே இருந்ததாகவும், உக்ரைன் ராணுவம் ரஷ்ய ஏவுகணைகளைத் தடுக்கப் பயன்படுத்திய அமெரிக்காவின் காலாவதியான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை இலக்கு மாறித் தங்களின் சொந்த தேவாலயத்தின் மீதே விழுந்திருக்கலாம் என்றும் ரஷ்யா வாதிட்டுள்ளது. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த கொடூர முகத்திற்குப் பிரான்சில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.