Loading...
உக்ரைன் கொடுத்த அடியில் திணறும் ரஷ்யா; அணு ஆயுத நாட்டிற்கு பெட்ரோல் சப்ளை செய்யும் இந்தியா?
உக்ரைன் தாக்குதலில் பற்றி எறியும் ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

உக்ரைன் கொடுத்த அடியில் திணறும் ரஷ்யா; அணு ஆயுத நாட்டிற்கு பெட்ரோல் சப்ளை செய்யும் இந்தியா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
09:49 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தங்களது சொந்த நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பெட்ரோல் விநியோகத்திற்காக ரஷ்யா இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள ஒரு அரிய தலைகீழ் மாற்றமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

உக்ரைன் தாக்குதலும் ரஷ்யாவின் தட்டுப்பாடும்

உக்ரைனின் தொடர் தாக்குதல்களால் ரஷ்யாவின் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு திறனில் சுமார் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல்கள் ஏதும் நடக்காத பட்சத்தில் கூட, இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பெட்ரோல் தட்டுப்பாட்டைப் போக்க ரோஸ்நெப்ட், காஸ்ப்ரோம் நெப்ட் மற்றும் லுகோயில் ஆகிய ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் இந்திய அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுள்ளன.

விநியோகம்

இந்தியாவிலிருந்து புறப்பட்ட பெட்ரோல் கப்பல்?

ஏற்கனவே இந்தியாவிலிருந்து ஒரு பெட்ரோல் கப்பல் ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் கூடுதல் விநியோகம் இருக்கும் என்றும் ராய்ட்டர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் தற்போது ஏற்றுமதி செய்யக் கூடுதல் பெட்ரோல் கையிருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளன.

இந்தியாவின் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு நேரடியாக எரிபொருளை விற்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், சர்வதேச வர்த்தகர்கள் மூலமாக இந்திய எரிபொருள் ரஷ்யாவை சென்றடைவதை அவர் மறுக்கவில்லை.

ADVERTISEMENT

நயாரா எனர்ஜி

நயாரா எனர்ஜி மூலம் பரிமாற்றம்

ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனத்திற்குப் பங்குகள் உள்ள இந்தியாவின் 'நயாரா எனர்ஜி' நிறுவனத்தின் குஜராத் மாநில வாடினார் துறைமுகத்திலிருந்து 42,000 மெட்ரிக் டன் பெட்ரோலுடன் புறப்பட்ட ஒரு கப்பல், எகிப்து அருகே மற்றொரு கப்பலுக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட எரிபொருளை மாற்றியதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தாங்கள் இந்தியச் சந்தைக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் ரஷ்யாவிற்கு எரிபொருள் விற்கவில்லை என்றும் நயாரா எனர்ஜி நிறுவனம் மறுத்துள்ளது.

உக்ரைனின் தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விநியோகத்திற்காகவும் ரஷ்யா இந்தியாவை நாடக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT