LOADING...
சுற்றுலா சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் அச்சுறுத்தல்: 20 நாள் பயணத்தில் 125 க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர பாதிப்பு
சுற்றுலா சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் அச்சுறுத்தல்

சுற்றுலா சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் அச்சுறுத்தல்: 20 நாள் பயணத்தில் 125 க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர பாதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
10:19 am

செய்தி முன்னோட்டம்

சுற்றுலா சொகுசுக் கப்பல் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மூடிய சூழல்களில், மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய வயிற்றுப் போக்கு வைரஸ்கள் எவ்வளவு வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக தற்பொழுது ரூபி பிரின்சஸ் கப்பலில் நோரோவைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கனடா மற்றும் அலாஸ்கா வரை 20 நாட்கள் பயணம் மேற்கொண்ட இக்கப்பலில் 102 பயணிகள் மற்றும் 23 ஊழியர்கள் உட்பட மொத்தம் 125 க்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன ?

ரூபி பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் நடந்தது என்ன?

சுமார் 3032 பயணிகளையும் 1144 ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு கடந்த ஜூன் 12 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட இந்த ரூபி பிரின்சஸ் சொகுசுக் கப்பல் தனது பயணத்தில் இருந்தபோதே பலருக்குத் திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் தோன்றி பரவத் தொடங்கின. அதிர்ஷ்டவசமாக, கப்பல் மீண்டும் கரை திரும்புவதற்கு முன்பாகவே சிலர் இதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தனர். இந்த திடீர் விபத்தைத் தொடர்ந்து, பிரின்சஸ் க்ரூஸஸ் நிறுவனம் கப்பலுக்குள் கூடுதல் சுகாதார நெறிமுறைகளை அமல்படுத்தியதுடன், அடுத்த பயணத்திற்கு முன்பாக கப்பலை முழுமையாகத் தூய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

முக்கிய அறிகுறிகள்

நோரோவைரஸ் தொற்றின் பொதுவான முக்கிய அறிகுறிகள்

பொதுவாக இந்த நோரோவைரஸ் பாதிப்பிற்கு உள்ளான நபர்களின் உடலில் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் இதற்கான அறிகுறிகள் மிகத் தீவிரமாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் திடீரென ஏற்படும் கடுமையான குமட்டல், தொடர் வாந்தி, நீர் போன்ற வயிற்றுப்போக்கு மற்றும் தாங்க முடியாத வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். இவற்றுடன் சிலருக்கு லேசான காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் வலி மற்றும் அதீத சோர்வு போன்ற உபாதைகளும் தொடர்ச்சியாகத் தோன்றும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

அதிக ஆபத்து

யாருக்கு இந்த வைரஸால் அதிக ஆபத்து ஏற்படக்கூடும்?

இந்த நோரோவைரஸ் தொற்று பொதுவாகச் சில நாட்களிலேயே தானாகக் குணமடையக்கூடிய ஒன்று என்றாலும், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இது கடுமையான ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு இந்தத் தொற்றினால் உடலில் நீர்ச்சத்து முற்றிலும் குறைந்து ஆபத்தான நிலை உருவாகலாம். வாய் வறட்சி, தலைச்சுற்றல், சிறுநீர் கழிப்பு குறைதல், குழப்பம் ஆகியவை இதன் தீவிர எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

Advertisement

பாதுகாப்பு முறைகள்

நோரோவைரஸ் பரவலைத் தடுக்கும் எளிய பாதுகாப்பு முறைகள்

இந்த நோரோவைரஸ் அசுத்தமான உணவு, நீர், பாதிக்கப்பட்ட நபர்களின் நேரடித் தொடர்பு மற்றும் வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் மிக எளிதாகப் பரவுகிறது. இதிலிருந்து தப்பிக்க, கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், உணவு உண்பதற்கு முன்பும் கைகளைச் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 நொடிகள் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் இந்த நோரோவைரஸுக்கு எதிராகச் செயல்படாது என்பதால் சோப்பு நீரே சிறந்தது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை முழுமையாகக் கழுவிய பின்பே சமைக்க வேண்டும்.

Advertisement