பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்!
இந்த வருடம் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ரெட்டிட் நிறுவனம். தங்கள் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 5% பேரை, அதாவது 90 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த ஆண்டு 300 புதிய ஊழியர்களை பணிநியமனம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதனை 100-ஆகக் குறைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 2005-ல் ஸ்டீவ் ஹப்மேன் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் ஆகியோரால் ரெட்டிட் நிறுவனம் நிறுவனப்பட்டது. தற்போது அந்த தளமானது 50 மில்லியன் தினசரி பயனர்களையும், 1 லட்சம் குழுக்களையும் கொண்டிருக்கிறது.
ரெட்டிட் சமூக பகிர்வு தளம்:
ரெட்டிட் தளமானது கடந்த சில ஆண்டுகளாக பங்குச்சந்தை சில்லறை முதலீட்டாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக மாறியிருக்கிறது. இந்தத் தளத்தில் தங்களுடை அனுபவங்கள் மற்றும் சூத்திரங்களை சிறுமுதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்வதால், பலரும் பங்குச்சந்தை குறித்து விவாதிக்க இந்த தளத்தை நாடி வருகின்றனர். 2021-ன் இறுதியில் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிட IPO-விற்கு விண்ணப்பித்தது ரெட்டிட் நிறுவனம். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த முடிவை நிலுவையில் வைத்திருந்தது. தற்போது மீண்டும் பங்குச்சந்தையில் நுழைய திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இது குறித்த அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.