உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர்
உக்ரைனில் நடைபெறும் மாஸ்கோவின் தாக்குதலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்ய போர் ஆரம்பித்து 1 வருடம் முடிய போகிறது. இதை முன்னிட்டு பேசிய ரஷ்ய அதிபர், "படிப்படியாக, நாங்கள் எதிர்கொள்ளும் நோக்கங்களை கவனமாகவும் முறையாகவும் தீர்ப்போம்" என்று கூறியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு மேற்கத்திய நாடுகளே முழுப் பொறுப்பு என்றும் அவர் கூறி இருக்கிறார். "உக்ரைனிய மோதலை தூண்டி விடுவது, அதிகப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... ஆகிய அனைத்துக்கும் மேற்கத்திய உயரடுக்கினர்களே காரணம்" என்று புதின் கூறியுள்ளார். "உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கிறது" என்றும் "நாங்கள் சரியான முறையில் இதற்கு பதிலளிப்போம்." என்றும் அவர் கூறி இருக்கிறார்.
உக்ரைன் அதிபரை சந்தித்த ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட மறுநாள் ரஷ்ய அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று(பிப் 20), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார். அப்போது, ரஷ்ய-உக்ரைன் போருக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக ஜோ பைடன் உறுதியளித்திருந்தார். மேலும், உக்ரைன் நாட்டை பாதுகாப்பது அமெரிக்காவின் முக்கிய கடமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். "உக்ரேனிய மக்களை வான்வழி குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாக்க உதவும் பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களின் மற்றொரு விநியோகத்தை நான் அறிவிப்பேன்." என்று அவர் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.