அரண்மனை வாழ்க்கையைத் துறந்து சென்றவர்கள் மீண்டும் ரிட்டர்ன்: இங்கிலாந்திற்குத் திரும்பும் ஹாரி-மேகன்
செய்தி முன்னோட்டம்
அரண்மனை பொறுப்புகளில் இருந்து விலகி அமெரிக்காவில் குடியேறிய இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கலிஃபோர்னியாவில் இருந்து வெளியேறும் ஹாரி-மேகன் தம்பதியினர், லண்டனுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு தனியார் இல்லத்தில் தங்கத் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி (7) மற்றும் இளவரசி லிலிபெட் (5) ஆகியோர் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள கல்வியாண்டில் இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் சேரப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலிஃபோர்னியா மற்றும் போர்ச்சுகலில் உள்ள தங்களது சொந்த வீடுகளையும் இவர்கள் தொடர்ந்து வைத்திருக்க உள்ளனர்.
இயல்பு வாழ்க்கை
அரச குடும்பப் பொறுப்புகள் இன்றி இயல்பு வாழ்க்கை
2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிய ஹாரி மற்றும் மேகன், இங்கிலாந்து திரும்பிய பிறகும் அரச குடும்ப பணிகளை மேற்கொள்ளாத தனியார் நபர்களாகவே தொடர்ந்து வசிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் மன்னர் மூன்றாம் சார்லஸ், தங்களது இந்த முடிவை வரவேற்பதாகவும், பேரன் பேத்திகளுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
குடும்ப உறவு
தொடரும் குடும்ப உறவுச் சிக்கல்கள்
இளவரசர் ஹாரி தனது தந்தை மன்னர் சார்லஸுடன் சுமூக உறவை விரும்பிய போதிலும், அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் உடனான உறவில் இன்னும் விரிசல் நீடித்து வருகிறது.
ஹாரி-மேகனின் இந்த இங்கிலாந்து வருகை குறித்த விவரங்கள் வில்லியம் தம்பதியினருக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.