LOADING...
நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
நிதி, கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது என பிரதமர் மோடி பெருமிதம்

நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 18, 2026
08:13 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மாநாடான விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டின் 10 ஆவது பதிப்பில் பேசிய பிரதமர், இந்தியா தற்பொழுது நிதி உள்ளடக்கம் (Financial Inclusion), கல்வி, தொலைதூர மருத்துவம் (Telemedicine) மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து பல புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஐரோப்பாவின் முதன்மைத் தொழில்நுட்ப நிகழ்வான விவாடெக் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2026 ஆம் ஆண்டு என்பது இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒரு மைல்கல் ஆண்டாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (India-EU FTA) வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதோடு, திறமையாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாப் பரிமாற்றத்திற்கான பல புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது." என்று குறிப்பிட்டார்.

யுபிஐ பயன்பாடு

ஈபிள் டவர் முதல் பாரிஸ் விமான நிலையம் வரை: பிரான்ஸிலும் யுபிஐ பயன்பாடு

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி குறித்துப் பேசிய பிரதமர், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள அமைப்பான ஆதார் மற்றும் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளமான யுபிஐ ஆகியவற்றை இந்தியா உருவாக்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். "நமது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ காரணமாக, உலகின் ஒட்டுமொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்கு மேல் இந்தியாவில்தான் தற்பொழுது நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டிற்கு வரும் இந்தியர்கள் தற்பொழுது பாரிஸ் விமான நிலையம் மற்றும் வரலாற்றுச் சின்னமான ஈபிள் டவர் ஆகிய இடங்களிலும் யுபிஐ முறையைப் பயன்படுத்திப் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்" என்று அவர் விளக்கினார்.

Advertisement

விண்வெளி

விண்வெளி முதல் அணுசக்தி வரை விரிவடையும் எல்லைகள்

கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா அதிவேக உருமாற்றத்தைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் ஆவணப் பையாக டிஜிலாக்கர் விளங்குவதை உதாரணக் காட்டினார். சில நாட்களுக்கு முன்பு பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்வு முதல் இன்றைய பாரிஸ் விவாடெக் மாநாடு வரை இந்திய புதிய தொழில்முனைவோர் சர்வதேச அளவில் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றனர். விண்வெளித் தொழில்நுட்பங்கள் முதல் அணுசக்தி வரை மனித ஆற்றலின் எல்லைகளை இந்தியா தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகத் தனது உரையில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

Advertisement