LOADING...
இந்தோனேசியாவில் இந்தியாவின் இவிஎம்; 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைத் தொடர்ந்து அஸ்த்ரா ஏவுகணைகளை வாங்கும் இந்தோனேசியா
அதிபர் மாளிகையான 'இஸ்தானா மெர்டேகா'வில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் இந்தியாவின் இவிஎம்; 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைத் தொடர்ந்து அஸ்த்ரா ஏவுகணைகளை வாங்கும் இந்தோனேசியா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 07, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணம் இரு நாடுகளிடையேயான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. பாதுகாப்பு, விண்வெளி, தேர்தல் தொழில்நுட்பம், கனிம வளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து எனப் பல முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் எட்டப்படவுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிபர் மாளிகையான 'இஸ்தானா மெர்டேகா'வில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் பிரதமர் மோடி இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ:

ஒப்பந்தங்கள்

இந்தியாவின் இவிஎம் தொழில்நுட்பம் முதல் ஏவுகணைகள் வரை

இந்தியாவின் தேர்தல் மேலாண்மை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர(EVM) மாதிரிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக, இந்தோனேசிய நாட்டின் தேவைகளுக்கேற்ப EVM இயந்திரங்களை உருவாக்குவதற்கு இந்தியா முழு ஆதரவை வழங்கவுள்ளது. பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'அஸ்த்ரா' வான்வழித் தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ஏவுகணைத் திறன் மற்றும் அதன் துல்லியம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தோனேசியா ஏற்கனவே தன் வசம் வைத்துள்ள பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவிலிருந்து கூடுதல் கடற்கரை பாதுகாப்பு பேட்டரிகளை இந்தோனேசியா வாங்கவுள்ளது.

முதலீடு

முக்கிய கனிம வளங்களில் முதலீடு

தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு தேவைகளுக்கான விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேசியாவில் எஃகு (Steel), நிக்கல் மற்றும் அரிய வகை காந்தங்கள் தயாரிப்பில் இந்தியா பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளது. மலாக்கா நீரிணையை நோக்கியவாறு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சபங் துறைமுகத்தை இரு நாடுகளும் இணைந்து கூட்டாக மேம்படுத்த உள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபாரில் உள்ள 'கிரேட் நிக்கோபார் துறைமுகத் திட்டத்தில்' இருந்து வெறும் 100 மைல் தொலைவில் இந்த சபங் துறைமுகம் அமைந்துள்ளதால், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பிற்கும், வணிகப் போக்குவரத்திற்கும் பெரும் பலமாக அமையும்.

Advertisement