பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் விருது வழங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
கொரோனா தொற்று சமயத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் உதவியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருதான 'ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருது வழங்கப்பட்டது.
இந்த விருது பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் நடந்த விழாவில் முறையாக வழங்கப்பட்டது. மோடியின் சார்பாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா அதைப் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்பின் அடையாளமாக இந்த விருது இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மோடியை கௌரவிக்கும் முடிவை பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி நவம்பர் 20, 2024 அன்று கயானாவில் நடந்த 2வது இந்தியா-காரிகோம் தலைவர்கள் உச்சி மாநாட்டில் அறிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்பு
கொரோனா சமயத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் மோடியின் பங்கு
மத்திய வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோய் சமயத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அத்தியாவசிய ஆதரவை வழங்குவதிலும் மோடியின் முக்கிய பங்கை மோட்லி பாராட்டினார்.
இந்திய அரசாங்கம் அதன் உலகளாவிய மனிதாபிமான முயற்சிகளின் கீழ் கரீபியன் உட்பட பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
மோடியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்ட மார்கெரிட்டா, இந்த விருது அங்கீகாரம் இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது என்றும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் நெருக்கடி ஒத்துழைப்புக்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் கூறினார்.
இந்தியாவும் பார்படாஸும் 1966 முதல் ராஜதந்திர உறவுகளைப் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.