மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில், சர்வதேச வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான இந்தியக் கடற்படை மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவக் கூட்டாண்மை குறித்துப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பிரதமர் மோடி கவலை
கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய மாலுமிகள் இருந்த பல கப்பல்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் 3 இந்திய மாலுமிகள் பலியான விவகாரம் இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து அதிபர் டிரம்பிடம் பேசிய பிரதமர் மோடி,"உலகளவில் கடல்சார் வர்த்தகத்தில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும், சர்வதேசக் கடல் வழிப்பாதை சுதந்திரமும் இந்தியாவிற்கு மிக முக்கியமானது. ஈரான் உடனான புதிய அமைதி ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப்,"இது மிகவும் கடினமான ஒரு தொழில். இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்" என்று உறுதியளித்தார்.
உத்தரவாதம்
"இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது": டிரம்ப் உத்தரவாதம்
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மிக வலுவானதொரு பிரகடனத்தை வெளியிட்டார். "நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை, வெள்ளை மாளிகையில் இந்தியாவிற்கு எப்போதும் ஒரு சிறந்த நண்பன் இருப்பான். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது; உடனடியாக இந்தியாவின் உதவிக்கு நாங்கள் அங்கு நிற்போம். உலக மேடையில் இந்தியா எல்லாவற்றிலும் மிக முக்கியப் பங்காற்றுகிறது." என நிருபர்கள் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
வர்த்தக பேச்சுவார்த்தை
"பார்க்க தேவதை மாதிரி இருப்பாரு, ஆனா பக்கா கில்லர்": டிரம்ப்
பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தை நடத்தும் திறமையைப் பாராட்டிய டிரம்ப், தனது வழக்கமான பாணியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். "பிரதமர் மோடியைப் பாருங்கள், அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகான, ஒரு தேவதையைப் போல சாதுவாகத் தெரிவார். ஆனால், வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தை என்று வந்துவிட்டால் அவர் ஒரு பக்கா 'கில்லர்'. மிகவும் கடினமான ஒரு வர்த்தகர். தனது நாட்டு நலனுக்காக யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவர்" என்று புகழ்ந்து தள்ளினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபர், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.