இந்தோனேசியாவின் உயரிய 'பிந்தாங் அதிபூர்ணா' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
செய்தி முன்னோட்டம்
மூன்று நாடுகள் அரசுமுறை பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பலத்த மூலோபாய உறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 'இஸ்தானா மெர்டேகா' அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Congratulations to Prime Minister Shri @narendramodi on being conferred with the 'Bintang Adipurna of the Republic of Indonesia', the highest civilian honour of the Republic of Indonesia.
— Rajnath Singh (@rajnathsingh) July 7, 2026
This exceptional honour is a resounding recognition of his visionary leadership,… pic.twitter.com/ZFe9wEwyl3
நெகிழ்ச்சி
"உற்சாக வரவேற்புக்கு நன்றி": எக்ஸ் தளத்தில் மோடி நெகிழ்ச்சி
அதிபர் மாளிகையில் சிறப்பான வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,"இஸ்தானா மெர்டேகாவில் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி இந்தோனேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். மேலும், கடந்த 2025 ஜனவரி மாதம் இந்தியாவின் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராக அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றிருந்த நிலையில், இந்த சந்திப்பு இருநாட்டு நட்புறவில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்ட் ஈஸ்ட்
'மகாசாகர்' தொலைநோக்கு பார்வை
டெல்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்பே தனது இந்த 6 நாள் பயணம் இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கை மற்றும் 'மகாசாகர்' தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். 'மகாசாகர்' (Mutual and Holistic Advancement for Security Across the Regions) என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்தியா முன்வைத்துள்ள ஒரு கூட்டு உத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு செல்லவுள்ளார்.