'பாதிப்பை தனி ஆளாக சுமக்கக் கூடாது': ஜி7 உச்சி மாநாட்டில் எரிபொருள், உணவுப் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி உரை
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பாதிப்புகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்த மோதல்களால் உலகளாவிய தென்னக (Global South) நாடுகள் சந்திக்கவிருக்கும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிப்பு
எரிபொருள், உரம் மற்றும் உணவு விநியோகச் சங்கிலி பாதிப்பு
"அனைவருக்கும் சமமான, பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்" என்ற தலைப்பிலான அமர்வில் பேசிய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியானது சர்வதேச அளவில் எரிபொருள், விவசாயத்திற்கான உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் கடுமையான சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தட்டுப்பாடுகளின் தாக்கம் உலகளாவிய தென்னகத்தில் உள்ள வளரும் நாடுகளை நீண்ட காலத்திற்குப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
வேண்டுகோள்
சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோள்
உலகளாவிய நெருக்கடிகளால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய ஏழை மற்றும் நடுத்தர நாடுகள், இந்தத் துயரத்தின் சுமையைத் தனி ஆளாகத் தாங்கி கொள்ளக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார். "நாம் உண்மையாகவே சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த விரும்பினால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை இந்த நெருக்கடிகளின் சுமையைச் சுமக்க நாம் தனியாக விட்டுவிடக் கூடாது" என்று அவர் கூறினார். மேலும், சர்வதேச நிதி நிறுவனங்கள் இத்தகைய கடுமையான உலகளாவிய அதிர்ச்சிகளை வளரும் நாடுகள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளவும், அவற்றின் பொருளாதார மீள்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ளவும் தேவையான பிரத்யேக ஆதரவு வழிமுறைகளையும் நிதியுதவிகளையும் உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த மாநாட்டின் மூலம் உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.