தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல்
தென்சீன கடலில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவத்தால் இயக்கப்படும் விநியோக படகு மற்றும் கடலோர காவல்படை கப்பலை, சீன கடலோர காவல்படை கப்பல் மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் யாரும் காயம் அடையவில்லை எனவும், கப்பல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட்டு வருவதாக, மூத்த பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அதிகாரி அசோசியேட்டட் பிரஸிடம் தெரிவித்துள்ளார். இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதியில் நடந்த இந்த விபத்தில், பிலிப்பைன்ஸ் கப்பல் விரைவாக வெளியேறியிருக்காவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இச்சம்பவத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் நீண்டகால நண்பனான அமெரிக்கா உடனடியாக கண்டித்து உள்ளது.
பிலிப்பைன்ஸ் மீது குற்றம் சுமத்தும் சீனா
பிலிப்பைன்ஸை இச்சம்பவத்திற்கு குற்றம் சாட்டியுள்ள சீனா, சம்பவம் நடந்தது சீன எல்லை என்றும், பிலிப்பைன்ஸ் கப்பல் சீன எல்லைக்குள் "அத்துமீறி நுழைந்ததாக" தெரிவித்துள்ளது. பலமுறை வானொலி எச்சரித்த போதிலும், அதனை பிலிப்பைன்ஸ் கப்பல் பொருட்படுத்தாததால், சீன கப்பல் பிலிப்பைன்ஸ் கப்பலை தடுத்ததாகவும், விபத்துக்கு பிலிப்பைன்ஸ் கப்பலே காரணம் என சீனா குற்றம்சாட்டியுள்ளது. "பிலிப்பைன்ஸ் தரப்பின் செயல் கடலில் மோதல்களைத் தவிர்ப்பதற்கான சர்வதேச விதிகளை கடுமையாக மீறுகிறது மற்றும் எங்கள் கப்பல்கள் செல்லும் வழியில் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது" என்று சீன கடலோர காவல்படை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீனா கிட்டத்தட்ட தென்சீன கடல் முழுவதையும் உரிமை கோரிவருகிறது. இச்சம்பவம் நடந்த இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதியையும் சீனா உரிமை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.