பனாமாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 'பெரும் பேரிடர்' என அதிபர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் (Panama) வெள்ளிக்கிழமை மதியம் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் முக்கியச் சாலைகள் சரிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ (Jose Raul Mulino) பனாமாவில் "பெரும் பேரிடர்" நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள முக்கியச் சாலைகள் முற்றிலுமாகத் தகர்ந்து போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம்
80-க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் மற்றும் தற்காலிக முடக்கம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, மத்திய ஹெர்ரெரா மாகாணத்தின் பிடலோசா அரிபா நகருக்கு மேற்கே பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டதால், தலைநகர் பனாமா சிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்..
இதனைத் தொடர்ந்து ரிக்டரில் 6.0-க்கும் மேல் பதிவான அதிர்வு உட்பட 80-க்கும் மேற்பட்ட வலுவான பின்னதிர்வுகள் ஏற்பட்டன.
முன்னெச்சரிக்கையாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதோடு, பனாமா சிட்டி சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
முக்கிய சர்வதேச வர்த்தகப் பாதையான பனாமா கால்வாய் எவ்வித சேதமுமின்றி வழக்கம்போல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
சர்வதேச உதவி
முடங்கிய முக்கிய நகரங்கள்
ஹெர்ரெரா, கோக்லே மற்றும் லாஸ் சாண்டோஸ் ஆகிய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக லாஸ் சாண்டோஸ் பகுதியில் உள்ள டோனோசி (Tonosi) நகரம் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசிய உதவிகளை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவசர மீட்புப் பணிகளுக்கு உதவத் தேவையான உதவிகளையும் மனிதவளத்தையும் திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.