Loading...
அமெரிக்காவில் 15,000 பேருக்கு வேலை; கிரீன் கார்டு சிக்கல்களுக்கு இடையே TCS வெளியிட்ட மெகா அறிவிப்பு
15,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக TCS அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அமெரிக்காவில் 15,000 பேருக்கு வேலை; கிரீன் கார்டு சிக்கல்களுக்கு இடையே TCS வெளியிட்ட மெகா அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அமெரிக்காவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை, PERM திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், காக்னிசென்ட், மைக்ரோசாப்ட், அடோப் உள்ளிட்ட 8 முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்றாகும். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது PERM விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்ததால், இக்கட்டுப்பாடுகள் தங்களது பணியாளர் உத்தி அல்லது வாடிக்கையாளர் சேவைகளைப் பாதிக்காது என்று டிசிஎஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னுரிமை

உள்ளூர் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை

இதுகுறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா முழுவதிலும் உள்ள 31 அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்கள் மூலம் வலிமையான உள்ளூர் பணியாளர்களை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது".

"பல்கலைக்கழக வளாக ஆட்சேர்ப்பு மாதிரியை மேலும் விரிவுபடுத்தி, அமெரிக்கத் தொழிலாளர் துறையின் விதிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு 15,000 உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது".

PERM

'PERM' திட்டம் என்றால் என்ன?

PERM என்பது வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு வழங்குவதற்கு முன்பாக, அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ளூர் ஊழியர்களின் ஊதியமும் பணிச்சூழலும் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக முதலாளிகளால் பின்பற்றப்படும் ஒரு சட்டப்பூர்வ நடைமுறையாகும்.

இத்திட்டம் நிறுத்தப்பட்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள எச்-1பி விசாக்களின் செல்லுபடி தன்மை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT