நச்சுப் புகையால் மலேசியாவில் பள்ளிகள் திடீர் மூடல்; கோலாலம்பூரில் அபாயகரமான காற்று மாசுபாடு
செய்தி முன்னோட்டம்
அண்டை நாடான இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் நிலப்பரப்புத் தீயால் வெளியான நச்சுப் புகை மலேசியாவை சூழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, தலைநகர் கோலாலம்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் இந்த அடர் புகையால் காற்றில் மாசுபாடு அதிகரித்து, சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
அபாய அளவு
அபாயகரமான அளவை எட்டிய காற்றின் தரம்
சுவிட்சர்லாந்தின் IQAir காற்றுத் தர கண்காணிப்பு அமைப்பின்படி, உலகின் மிக மோசமாக மாசுபடுத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில் கோலாலம்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
கோலாலம்பூரில் காற்றின் தரக் குறியீடு 170-ஐ எட்டியுள்ளது.
மலேசிய விதிகளின்படி API 100-க்கு மேல் சென்றாலே அது ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்படும்.
நிலைமை மோசமடைந்து வருவதால் 4 மாநிலங்கள் மற்றும் 2 கூட்டாட்சிப் பகுதிகளில் முழுமையாக பள்ளிகளை மூடக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியா
இந்தோனேசிய அதிபருடன் மலேசிய பிரதமர் அவசர ஆலோசனை
காற்றில் மாசுபாட்டின் அளவு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்க இந்தோனேசிய அதிபர் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவில் செயற்கை மழை தூண்டும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசியான்
ஆசியான் நாடுகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு
பருவநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியுள்ள எல் நினோ வானிலை மாற்றமே இந்த காட்டுத் தீக்கு முக்கியக் காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சிங்கப்பூரிலும் காற்றின் தரக் குறியீடு 205 என்ற மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க 11 ஆசியான் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை கூட்ட மலேசிய வெளியுறவு அமைச்சருக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.