யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது! எலான் மஸ்க் விவகாரத்தில் மத்திய அமைச்சர் சிந்தியா அதிரடி; ராகுல் காந்திக்கு பதிலடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் ஏகபோக உரிமையை மத்திய அரசு அனுமதிக்காது என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இடதுபக்கமாக அல்லது வலதுபக்கமாக செல்கிறதா என்றே தெரியவில்லை என விமர்சித்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
செயற்கைக்கோள் உரிமை
3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் சேவை உரிமம்
10-வது இந்திய மொபைல் காங்கிரஸ் 2026 மாநாட்டில் பேசிய அமைச்சர், "சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றியே அதிக உரையாடல்கள் நடக்கின்றன.
ஆனால் இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைக்காக மூன்று நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது பாதுகாப்புத் தேவைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளை தனித்தனியாக பூர்த்தி செய்த பிறகே தங்களது செயல்பாடுகளைத் தொடங்க முடியும்." எனக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சி
5ஜி விரிவாக்கம் மற்றும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் தற்போது 110 கோடி பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளதாகவும், நாட்டின் 99.9% மாவட்டங்களில் 5ஜி சேவைகள் வெற்றிகரமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வியில் செயற்கைக்கோள் மற்றும் ஏஐ மாடல்கள் திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கிட்ஹப் தளத்தில் திறந்தவெளி ஏஐ திட்டங்களில் இந்திய டெவலப்பர்களின் பங்களிப்பு 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஊக்கத்தொகை
நிதி மோசடி தடுப்பு மற்றும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை
இந்தியாவில் போலி மொபைல் எண்கள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகளைத் தடுக்க 1,600 முகமைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சுமார் 45 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி கூடுதல் விற்பனையும், ரூ.25,000 கோடி கூடுதல் ஏற்றுமதியும் சாத்தியமாகி 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.