Loading...
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?
மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்ட உச்சி மாநாட்டை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ள பாகிஸ்தான், கூட்டமைப்பின் மரபுகளுக்கு ஏற்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை அழைப்பது அமைப்பாளராகப் பாகிஸ்தானின் கடமையாகும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான உறவுகளுக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் இதில் நேரில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

விளக்கம்

இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த விளக்கம்

முன்னதாக, மணிலாவில் நடைபெற்ற ASEAN மாநாட்டின் இடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

அத்தகைய கோரிக்கைகள் எதுவும் பெறப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உலகளாவிய GDP-யில் சுமார் 25%யும், சர்வதேச வர்த்தகத்தில் 15%ற்கும் அதிகமான பங்கையும் கொண்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவிலேயே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT