LOADING...
அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் நடத்தத் திட்டம்
அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது

அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் நடத்தத் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 06, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் நிலவி வந்த பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த இடமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானின் தொழில்நுட்ப குழுக்களுக்கு இடையேயான இந்த முக்கியச் சந்திப்பு வரும் ஜூலை 11 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை

ஜூலை 11-ல் பேச்சுவார்த்தை?

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது உண்மைதான். அதற்கான தேதியாக ஜூலை 11 பரிசீலனையில் இருந்தாலும், ஈரானில் நிலவும் தற்போதைய சூழலை பொறுத்து இந்த தேதி மேலும் சில நாட்கள் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த தூதரகச் செயல்பாடுகளிலும் பாகிஸ்தான் அரசு வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு தரப்புடனும் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளது.

பிரச்சினைகள்

விவாதத்திற்கு வரும் 3 முக்கிய பிரச்சினைகள்

இந்த இஸ்லாமாபாத் கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள். சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவித்தல். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த முக்கியக் கட்டுப்பாடுகள்.

Advertisement

தாமதம்

ஈரான் தரப்பில் பங்கேற்பதில் ஏன் தாமதம்?

அமெரிக்கா -ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தாலும், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வல நிகழ்வுகள் வரும் ஜூலை 9 வரை நடைபெற உள்ளன. இந்த சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகே, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள ஈரானியக் குழுவின் பிரதிநிதிகள் யார் யார் என்பது இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இஸ்லாமாபாத்தில் இந்த சந்திப்பு உறுதிசெய்யப்பட்டால், அமெரிக்கா -ஈரான் போன்ற இரு பெரும் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஒரு முக்கியத் தூதரக மையமாக பாகிஸ்தான் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர காரணங்களால் வாஷிங்டனோ அல்லது தெஹ்ரானோ அதிகாரப்பூர்வமாக இந்த இடத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

Advertisement