364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்
ரஷ்ய-உக்ரைன் போரின் போது, உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான், கடந்த ஆண்டு இரண்டு தனியார் யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுஎஸ்) நிறுவனங்களுடனான ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து குறைந்தது 364 மில்லியன் டாலர்களைப் பெற்றதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ராணுவ சரக்கு விமானம், பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பாவிற்கு ஐந்து பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் பிபிசி உருது கூறியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கானில் இருந்து சைப்ரஸ், அக்ரோதிரியில் உள்ள பிரிட்டிஷ் தளத்திற்கும், பின்னர் ருமேனியாவுக்கும் அந்த பிரிட்டிஷ் ராணுவ சரக்கு விமானம் 5 முறை பயணம் செய்திருக்கிறது.
பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000% அதிகரிப்பு
ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், எந்த விதமான ஆயுதங்களையும் தாங்கள் உக்ரைனுக்கு விற்கவில்லை என்று இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களான குளோபல் மிலிட்டரி மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள் ஃபெடரல் ப்ரோக்யூர்மென்ட் டேட்டா சிஸ்டத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. கூடுதலாக, 2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000% அதிகரித்துள்ள விவரத்தை பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் தரவுகள் காட்டுவதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. "2021-22ஆம் நிதியாண்டில் பாகிஸ்தான் $13 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி 2022-23ஆம் நிதியாண்டில் $415 மில்லியனை எட்டியது" என்று பிபிசி உருது தனது செய்தியில் கூறியுள்ளது.