LOADING...
பிரெஞ்சு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்
பிரெஞ்சு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை

பிரெஞ்சு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2026
08:41 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளின் கண் முன்னரே பிரெஞ்சு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர வழக்கில், இரு குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு குற்றவாளிகளுக்கு கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரு குற்றவாளிகளும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மரண தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

கொடூரம்

உலகையே உலுக்கிய நெடுஞ்சாலைக் கொடூரம்

கடந்த செப்டம்பர் 9, 2020 அன்று, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது காரில் எரிபொருள் தீர்ந்துபோனதால், உதவிக்காக காத்திருந்தபடி காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆயுதம் ஏந்திய இரு கொடூரர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து, அந்தப் பெண்ணைக் குழந்தைகளின் கண் முன்னரே துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரொக்கப் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளையும், பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது.

சர்ச்சை

போலீஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சு

இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவிய வேளையில், அப்போதைய லாகூர் நகரக் காவல்துறைத் தலைவர் உமர் ஷேக் விடுத்த அறிக்கை பொதுமக்களின் கோபத்தை மேலும் தூண்டியது. பாதிக்கப்பட்ட பெண் ஏன் நள்ளிரவில் தனியாகப் பிரயாணம் செய்தார் என்றும், அவர் வேறு பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் பொறுப்பற்ற முறையில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளானது. இதனைத் தொடர்ந்து குஜ்ஜார்புரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர். தற்போது உயர் நீதிமன்றமும் இவர்களுக்கான தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் இறுதி நீதி கிடைத்துள்ளது.

Advertisement