LOADING...
அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா; பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்க உள்ளதாக தகவல்
அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பங்கேற்க உள்ளதாக தகவல்

அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா; பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்க உள்ளதாக தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 12, 2025
03:55 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு செல்ல உள்ளார். சனிக்கிழமை (ஜூன் 14) திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் 250 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் செல்ல உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளுடன் இணைந்து இந்த நிகழ்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மற்றும் இரு நாடுகளுடனும் உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க முயற்சிகளின் பின்னணியில் இந்த விஜயம் அமைந்துள்ளது. தனது வருகையின் போது, ​​அசிம் முனீர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இரு நாடுகளும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதாக பாராட்டு

இந்த பயணம் அமெரிக்க CENTCOM கமாண்டர் ஜெனரல் மைக்கேல் குரில்லா பாகிஸ்தானை பயங்கரவாத எதிர்ப்பு உலகில் ஒரு அற்புதமான கூட்டாளி என்று சமீபத்தில் பாராட்டியதைத் தொடர்ந்து அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை இப்படி அமெரிக்கா பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வலுவான அமெரிக்க உறவுகள் பரஸ்பரம் பிரத்தியேகமானவை அல்ல என ஜெனரல் மைக்கேல் குரில்லா வலியுறுத்தினார். இந்திய தரப்பில் இது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், முனீரின் பயணம் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் அறிவித்துள்ளனர்.