LOADING...
பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்
பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமானத் தளம் மீது தாலிபான்கள் தாக்குதல்

பாகிஸ்தான் மீது தாலிபான்கள் வான்வழித் தாக்குதல்! ராவல்பிண்டி முதல் குவெட்டா வரை அதிரடி ட்ரோன் தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 02, 2026
10:32 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லை மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைகள், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மிக முக்கியமான நூர் கான் விமானத் தளம் மற்றும் அதன் கட்டளை மையத்தை இலக்கு வைத்து ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே ஆபரேஷன் சிந்துார் மூலம் பாதிக்கப்பட்டிருந்த இந்தத் தளம், தற்போது தாலிபான்களின் தாக்குதலால் மேலும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கு

முக்கிய ராணுவ தளங்கள் இலக்கு

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தாலிபான்கள் பாகிஸ்தானின் பல முக்கிய ராணுவ நிலைகளை ஒரே நேரத்தில் தாக்கியுள்ளனர்: குவெட்டா: பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12-வது டிவிஷன் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. கைபர் பக்துன்க்வா: மொஹமண்ட் ஏஜென்சி பகுதியில் உள்ள க்வாஸாய் ராணுவ முகாம் மற்றும் பல கட்டளை மையங்கள் ட்ரோன்கள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. விமானி சிறைபிடிப்பு: ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், பாராசூட் மூலம் உயிர் தப்பிய அதன் விமானியை உயிருடன் சிறைபிடித்துள்ளதாகவும் தாலிபான் தரப்பில் கூறப்படுகிறது.

போர் பிரகடனம்

பாகிஸ்தானின் தாக்குதலும் நேரடிப் போர் பிரகடனமும்

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விமானப் படை, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்ஸாதா இருக்கும் காந்தஹார் நகர் மீது குண்டுமழை பொழிந்தது. இதில் 133 தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதற்குப் பதிலடியாகத் தாலிபான்கள் நடத்திய எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் தாங்கள் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

பதற்றம்

பிராந்தியத்தில் நிலவும் பதற்றம்

தாலிபான்களின் இந்தத் துணிச்சலான வான்வழித் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்புத் திறனை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். எல்லையில் இரு நாடுகளும் பீரங்கிகள் மற்றும் கூடுதல் படைகளைக் குவித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளைத் தொடர்ந்து தெற்காசியாவிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மோதலால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement