இனி மொபைலில் 'e-OCI' போதும்! இந்திய அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வசதி
செய்தி முன்னோட்டம்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (OCI Cardholders) பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இந்திய அரசு 'e-OCI' என்ற புதிய டிஜிட்டல் ஓசிஐ கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், ஓசிஐ கார்டுதாரர்கள் இனி தங்களின் அசல் பிசிகல் ஓசிஐ புக்லெட்-ஐ எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை; தங்களது மொபைல் போனில் இருக்கும் டிஜிட்டல் கார்டை காண்பித்தாலே போதுமானது என ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது
செயல்பாடு
e-OCI வசதி எவ்வாறு செயல்படும்?
இனி ஓசிஐ கார்டுதாரர்கள் தங்களது டிஜிட்டல் 'e-OCI' கார்டை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். சர்வதேச பயணங்களின் போது, விமான நிலையங்களின் குடிவரவு சோதனைச் சாவடிகளிலும், இத்திட்டத்தை ஏற்கும் விமான நிறுவனங்களிடமும் தங்களின் பாஸ்போர்ட்டுடன் சேர்த்து இந்த டிஜிட்டல் கார்டைக் காண்பிக்கலாம். இந்த டிஜிட்டல் ஓசிஐ கார்டு என்பது உங்களின் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுக்கு மாற்றானது அல்ல. பயணங்களின் போது பாஸ்போர்ட் எப்போதும் கட்டாயமாகும்.
மாற்றங்கள்
புதிய விண்ணப்பதாரர்களுக்கு என்ன மாற்றம்?
இன்று முதல் புதிதாக ஓசிஐ கார்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துப் புதிய விண்ணப்பதாரர்களுக்கும் டிஜிட்டல் ஓசிஐ கார்டுகள் மட்டுமே வழங்கப்படும். அவர்களுக்குப் பழையபடி பிசிகல் புக்லெட்டுகள் வழங்கப்பட மாட்டாது. கார்டு டிஜிட்டலாக மாறினாலும், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள், தகுதி வரம்புகள் மற்றும் ஆவணச் சமர்ப்பிப்பு ஆகியவற்றில் எந்தவொரு மாற்றமும் இல்லை. வழக்கம்போல இந்திய அரசின் ஓசிஐ இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உங்களிடம் அசல் (Physical) ஓசிஐ கார்டு புக்லெட் இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களின் பழைய கார்டுகள் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகச் செல்லும். அவை ரத்து செய்யப்படவில்லை.