சர்வதேச அளவில் பிஷ்னோய் கேங் மீது பாய்ந்த 'ஆபரேஷன் ஹார்ட் பால்'; சீக்கியர் நிஜ்ஜார் கொலையின் பின்னணி வெளிவந்தது
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் ஹார்ட் பால்' என்ற அதிரடி வேட்டையில், இந்தியாவை அடித்தளமாக கொண்டு உலகளவில் செயல்பட்டு வந்த மூன்று முக்கிய பாதாள உலகக் குற்றக் கும்பல்களின் நெட்வொர்க் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த சோதனையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டமைப்புக்கு நேரடி தொடர்பு இருப்பதை அமெரிக்க நீதிமன்றக் குற்றப்பத்திரிகை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகை
குற்றப்பத்திரிகைகளின் பின்னணி மற்றும் இந்த வேட்டையின் முழு விவரம்
குற்றப்பத்திரிகையின்படி, 33 வயதான லாரன்ஸ் பிஷ்னோய், சிறையிலிருந்துகொண்டே கடத்தப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் பாதுகாப்பான இணைய நெறிமுறைகளை பயன்படுத்தி இந்த சர்வதேசக் குற்றக் கும்பலை வழிநடத்தியுள்ளார். பிஷ்னோய் மற்றும் வட அமெரிக்காவில் இருக்கும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகிய இருவருமே இணைந்து 2023-ல் நிஜ்ஜாரை கொலை செய்ய உத்தரவிட்டதாக அமெரிக்கப் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடா அரசால் 'பயங்கரவாத அமைப்பு' என முத்திரை குத்தப்பட்ட இந்த பிஷ்னோய் கும்பல், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட வட அமெரிக்காவில் வாழும் வசதியான இந்திய வம்சாவளியினரைச் சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டிப் பல மில்லியன் டாலர்களைப் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யம்
குற்றப்பத்திரிகையில், கனடாவின் வான்கூவரை சேர்ந்த ரவீந்தர் சிங் தண்டா தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கும்பல் வட அமெரிக்காவின் முக்கிய கார்டெல்களுடன் கைகோர்த்து, டிரக்குகள் மற்றும் விவசாய வாகனங்கள் மூலம் கனடாவுக்குள் வாரந்தோறும் நூற்றுக்கணக்கான கிலோ கொக்கைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருட்களைக் கடத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், சாக்ரமெண்டோ மற்றும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 1,000 கிலோ கொக்கைன் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. பல துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான பணம் கைப்பற்றப்பட்டன. கலிபோர்னியா, ஜார்ஜியா மற்றும் இந்தியானாவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்பெயினில் ஒரு நபர் பிடிபட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தலைமறைவாக உள்ள 10 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.