அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?
இந்திய-அமெரிக்க பொறியியலாளர் ஹிர்ஷ் வர்தன் சிங், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இவரை தவிர, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கர்களான நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் ஹிர்ஷ் வர்தன் சிங், தான் வாழ்நாள் முழுவதும் நியூ ஜெர்சி குடியரசுக் கட்சியின் பழமைவாத பிரிவை மீட்டெடுக்க உழைத்து வந்ததாகவும், தான் அமெரிக்காவை முதலில் நிறுத்தும் பழமைவாதி என்றும் கூறியுள்ளார். மேலும், "கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை மாற்றியமைக்கவும், அமெரிக்க மதிப்புகளை மீட்டெடுக்கவும் வலுவான தலைமை தேவை." என்றும் சிங் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
38 வயதான ஹிர்ஷ் வர்தன் சிங் கடந்த வியாழன் அன்று மத்திய தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார் என்று செய்திகள் கூறுகின்றன. இவருக்கு முன்னதாக, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா கவர்னர் ஹேலி(51) மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ராமசாமி(37) ஆகியோரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். 2024ஆம் ஆண்டிற்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் இவர்கள் மூவரும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் போட்டியிட இருக்கின்றனர். குடியரசுக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளரை முறையாகத் தேர்ந்தெடுப்பதற்காக, 2024ஆம் ஆண்டு ஜூலை 15-18ஆம் தேதிகளில் குடியரசுக் கட்சியினர் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் சந்திக்க உள்ளனர்.