நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து
நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த ஒலியை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் நியமித்தார். இந்நிலையில், இன்று கே.பி.சர்மா ஒலியின் பதவியேற்பு விழா ஷிடல் நிவாஸில் நடந்தது. ஜனாதிபதி பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸின் ஆதரவுடன் ஒலி மீண்டும் பிரதமராகி உள்ளார்.
பிரதமர் ஒலியின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து
அவர் நியமிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்கான அரசியலமைப்பு ஆணையை எதிர்கொள்கிறார். இந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற, 275 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஒலிக்கு குறைந்தபட்சம் 138 வாக்குகள் தேவைப்படும். இதற்கிடையில், பிரதமர் ஒலியின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நேபாளம் இடையே இருதரப்பு உறவுகள் வலுப்படும் என்று மேலும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். "எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்" என்று மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.