அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா
வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலா ஹாரிஸை ஆதரிப்பாரா இல்லையா என்ற ஊகங்களுக்கு மத்தியில், அவரது பதில் வந்துள்ளது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆகியோர் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸிடம் அதிபர் பதவிக்கேற்ற குறிக்கோள், குணநலம் மற்றும் வலிமை இருப்பதாக ஒபாமா தம்பதியினர் கூறியுள்ளனர்.
பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்ற ஹாரிஸ்
வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருந்த அதிபர் ஜோ பைடன், தான் போட்டியிட போவதில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதோடு, அவர் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகியதில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் கமலா ஹாரிஸ் பேசியதாகக் கூறப்படுகிறது. அதில் பராக் ஒபாமாவும் ஒருவர் ஆவார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏற்கனவே பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அவர் ஆவதற்குத் திட்டமிட்டுள்ளார்.