Page Loader
மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா
ஜப்பானின் கடலோரக் காவலர் படை, ஆயுதம் ஏற்கனவே விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது.

மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா

எழுதியவர் Sindhuja SM
Mar 27, 2023
11:55 am

செய்தி முன்னோட்டம்

வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. "வட கொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை கிழக்குக் கடலை நோக்கிச் செலுத்தியது" என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர் கூறியுள்ளார். இந்த கிழக்குக் கடல், ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம், "சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது" என்று கூறி இருக்கிறது. ஜப்பானின் கடலோரக் காவலர் படை, ஏவுகணை ஏற்கனவே கடலுக்குள் விழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று, தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை நடத்தியது. இது நடந்த சில நாட்களில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது.

உலகம்

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கான எச்சரிக்கை

இந்த ராணுவ பயிற்சிகளை எல்லாம், தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் சதியாக வட கொரியா பார்க்கிறது. வட கொரியாவை படையெடுப்பதற்கு தான் அந்த இரண்டு நாடுகளும் ஒத்திகை பார்ப்பதாக வட கொரியா குற்றம்சாட்டி இருந்தது. ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கும், அணு ஆயுத சோதனையை நடத்துவதற்கும் வடகொரியா இந்த பயிற்சியை ஒரு காரணமாக பயன்படுத்தும் என்று ஆய்வாளர்கள் முன்பே கூறி இருந்தனர். "கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை சோதித்தது. வட கொரியாவின் அணு ஆயுத சக்தியை பற்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியா உணர்ந்து கொள்வதற்கு இந்த சோதனை ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று அப்போது வடகொரியா தெரிவித்திருந்தது.