அமெரிக்கா தாக்குதலுக்கு எல்லை தாண்டி பதிலடி கொடுக்க ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வரக்கூடிய எந்தவொரு புதிய அச்சுறுத்தலுக்கும் எவ்வித புவியியல் எல்லை கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாகவும் துல்லியமாகவும் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்நாட்டு ஆயுதப் படைகளுக்குத் உத்தரவிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் போர் சூழல் அடுத்தகட்ட தீவிர மோதலாக உருவெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், இன்று சனிக்கிழமை ஈரானிய உச்ச தலைவரிடமிருந்து வெளியாகியுள்ள இந்த கடுமையான எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை
எல்லை கடந்த தாக்குதல் எச்சரிக்கை
ஈரான் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளுடன் தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மொஜ்தபா கமேனி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
எதிரி நாடுகளிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல்களோ அல்லது ராணுவத் தாக்குதல்களோ முன்னெடுக்கப்பட்டால், அதற்கு உடனடி மற்றும் கடுமையான விளைவுகளைத் தரும் வகையில் எதிர்தாக்குதல் அமைய வேண்டும் என்றும், இந்த பதிலடி நடவடிக்கைகளுக்கு எந்தவொரு புவியியல் எல்லைகளும் கிடையாது என்றும் அவர் ராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிக்கை அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்திலும், ஈரானிய அரசு ஊடகங்களிலும் உடனடியாக வெளியிடப்பட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தி
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஈரான் உச்ச தலைவரின் இந்த உத்தரவு, இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பதற்றமான நிகழ்வுகளுக்கு மத்தியில் வந்துள்ளது.
முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை, சர்வதேச வர்த்தகத்திற்குப் பிரதானமாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் அங்கீகரிக்கப்படாத வழித்தடங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி நான்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது.
அந்த முக்கிய நீர்வழிப் பாதையைக் கடந்து சென்ற மற்றொரு கச்சா எண்ணெய் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை பாய்ந்து தாக்கியதாகவும் சர்வதேச கடல்சார் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமரச பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், களத்தில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் ஈரானிய உச்ச தலைவரின் எல்லை கடந்த பதிலடி உத்தரவுகளும் மத்திய கிழக்கை மீண்டும் பெரும் போரின் விளிம்பிற்கு இழுத்துச் சென்றுள்ளன.