
வரிவிதிப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண டிரம்ப் கட்சியின் மூத்த தலைவர் இந்தியாவுக்கு கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% சுங்க வரியை விதித்த நிலையில், இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவுடன் இணைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்காவுக்கு இந்தியா போன்ற ஒரு கூட்டாளி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். சமீரத்திய வர்த்தகப் பதற்றத்தை விரைவாகத் தீர்க்குமாறு இந்தியாவை வலியுறுத்தி நிக்கி ஹேலி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் நட்பு, தற்போதைய குழப்பங்களைச் சமாளிக்க ஒரு வலுவான அடிப்படையை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை தேவை
வர்த்தக கருத்து வேறுபாடுகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி போன்ற விவகாரங்களுக்கு கடினமான உரையாடல் தேவை என்றும், ஆனால், சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவுக்கு இந்தியாவில் ஒரு நண்பர் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக, டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான உறவுகளைச் சீர்குலைக்க வேண்டாம் என ஹேலி எச்சரித்திருந்தார். சீனாவை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு விலைமதிப்பற்ற சுதந்திரமான மற்றும் ஜனநாயகக் கூட்டாளி என்றும், இந்தியாவுடன் 25 ஆண்டுகாலமாக வளர்க்கப்பட்ட உறவை தகர்த்தெறிவது ஒரு மூலோபாயப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதை இந்திய வெளியுறவுத் துறை (MEA) சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.