LOADING...
ஐரோப்பாவை அச்சுறுத்தும் நியூகாசில் பறவை நோய் 2026! நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
ஐரோப்பாவை அச்சுறுத்தும் நியூகாசில் பறவை நோய் அறிகுறிகள்

ஐரோப்பாவை அச்சுறுத்தும் நியூகாசில் பறவை நோய் 2026! நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 05, 2026
06:58 pm

செய்தி முன்னோட்டம்

ஐரோப்பிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 'நியூகாசில்' (Newcastle Disease) எனப்படும் அதிதீவிரப் பறவை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில் தொடங்கி தற்போது மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா வரை பரவியுள்ள இந்த வைரஸால், லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் முட்டை மற்றும் இறைச்சி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாகப் போலந்து நாடு இந்தத் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளில் சுமார் 5 லட்சம் பறவைகள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் பிராண்டன்பேர்க் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் மட்டும் 3,26,000 முட்டையிடும் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.

நியூகேஸில் நோய்

நோய் வகைகள்

இது 'ஏவியன் பாராமிக்சோவைரஸ் வகை 1' (APMV-1) என்ற வைரஸால் ஏற்படும் மிகக் கடுமையான தொற்று நோயாகும். இது கோழிகள் மற்றும் காட்டுப் பறவைகளைத் தாக்குகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது: லென்டோஜெனிக் (Lentogenic): லேசான பாதிப்பு. மெசோஜெனிக் (Mesogenic): மிதமான பாதிப்பு. வெலோஜெனிக் (Velogenic): மிகக் கடுமையானது. இதில் 100% வரை உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாதிக்கப்பட்ட பறவைகளைக் கையாளுபவர்களுக்கு லேசான கண் எரிச்சல் (Conjunctivitis) ஏற்படலாம்.

சுவாச கோளறு

நோய் அறிகுறிகள்

இருமல், தும்மல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். கோழிகளின் இறக்கைகள் தொங்குதல், கழுத்து முறுக்குதல் (Torticollis), கால்கள் பக்கவாதம் அடைதல் மற்றும் ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருதல். பச்சை நிறத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு முட்டை இடுவது திடீரென முற்றிலும் நின்றுவிடும். முட்டைகள் மெல்லிய ஓட்டுடன் அல்லது வடிவம் மாறித் திரவ நிலையில் காணப்படும். தலை வீக்கம், தூக்கம் மற்றும் எந்த அறிகுறியும் இன்றி திடீர் மரணம் ஏற்படும்.

Advertisement

தடுக்கும் முறைகள்

தடுப்பூசி

இந்த நோய்க்குச் சிகிச்சை கிடையாது, தடுப்பு முறைகள் மட்டுமே தீர்வாகும். உள்ளூர் வழிகாட்டுதலின்படி முறையான கால இடைவெளியில் கோழிகளுக்குத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். பண்ணைக்குள் வெளியாட்கள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். கிருமிநாசினிகள் கலந்த பாதக் குளியல் (Footbaths) மற்றும் சுத்தமான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். வலைகள் மற்றும் திரைகள்மூலம் காட்டுப் பறவைகள் பண்ணைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். புதிய பறவைகளை வாங்கும்போது அவற்றை 21-30 நாட்கள் தனியாக வைத்துப் (Quarantine) பராமரித்த பின்னரே மற்ற கோழிகளுடன் சேர்க்க வேண்டும். உங்கள் பண்ணையில் பறவைகள் திடீரென இறந்தால், உடனடியாகக் கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

எப்படிப் பரவுகிறது

மனிதர்களுக்கு ஆபத்தா

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சம், சளி மற்றும் உமிழ்நீர் மூலம் மற்ற பறவைகளுக்குப் பரவுகிறது. மேலும், பண்ணை உபகரணங்கள், வாகனங்கள், பண்ணை தொழிலாளர்களின் உடைகள் மற்றும் காட்டுப் பறவைகள் மூலமாகவும் ஒரு பண்ணையிலிருந்து மற்றொன்றிற்குப் பரவுகிறது. நியூகாசில் நோய் மனிதர்களுக்குப் பெரிய அளவில் உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்களின்றி பாதிக்கப்பட்ட பறவைகளைக் கையாளும் நபர்களுக்குக் கண்களில் லேசான அரிப்பு அல்லது வீக்கம் (Conjunctivitis) ஏற்படலாம். முறையாகச் சமைக்கப்பட்ட இறைச்சியை உண்பதால் பாதிப்பு ஏதுமில்லையென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement