புகையிலை தடையை ரத்து செய்ய முடிவு: புதிய நியூசிலாந்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
நியூசிலாந்தின் புதிய வலது சாரி அரசாங்கம் இன்று பதவியேற்றது. அடுத்த வாரம் நியூசிலாந்து நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் அரசாங்கம் கொண்டு வந்த புகையிலை தடையை புதிய அரசாங்கம் ரத்து செய்யும் என்று இன்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன் கூறியுள்ளார். இதனால் புகையிலை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக கூறி வருகின்றன. முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் ஆட்சியில் "தலைமுறை புகைபிடித்தல் தடை" என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, 2008ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தில் சிகரெட் விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
பிளாக் மார்க்கெட்டுகளில் சிகரெட் விற்கப்படுவதை தடுக்க முயற்சி
பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகையிலை எதிர்ப்பு ஆர்வலர்கள் ஆகியோர் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் இதே போன்ற தடை பிரிட்டனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன், சிகரெட் விற்பனை தடையை ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மக்கள், பிளாக் மார்க்கெட்டுகளில் இருந்து சிகரெட் வாங்குவதை தடுப்பதற்காக இந்த தடையை நீக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், சிகரெட் வரிகளால் அரசாங்கத்திற்கும் பெரும் லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கம் சிகரெட் பிடிப்பதை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்றும் லக்சன் கூறியுள்ளார்.