பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா?
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுப்பதற்காக புதிய முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். இந்தப் புதிய திட்டத்தின் கீழ் ஒரு நெட்ஃபிலிக்ஸ் கணக்கை ஒரே குடும்பத்தில் இருக்கும் நபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், வேற்றும் நபர்கள் அந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாது. இதற்காக நமது வீட்டின் இருப்பிடம் குறித்த தகவலை நெட்ஃபிலிக்ஸ் செயலியில் அப்டேட் செய்ய வேண்டும். அந்தக் கணக்கைப் பயன்படுத்தும் சாதனங்கள், ஒவ்வொரு மாதமும், நெட்ஃபிலிக்ஸில் அப்டேட் செய்யப்பட்ட இருப்பிடத் தகவலை சரிபார்க்க வேண்டும். அப்படி சரிபார்க்க முடியவில்லை என்றால், அந்தக் கணக்கிற்கான பாஸ்வேர்டு பகிர்விற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய முயற்சி கைகொடுத்ததா? இந்தியாவிற்கு என்ன திட்டம்?
இந்த புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு முதல் நான்கு நாட்களில் மட்டும் 2.8 லட்சம் புதிய சந்தாதாரர்களை பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். அந்நிறுவனத்தின் கணக்குப்படி, உலகம் முழுவதும் 100 மில்லியன் பயனர்கள் சந்தா செலுத்தாமல் பாஸ்வேர்டு பகிர்வின் மூலம் தங்கள் சேவையைப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் முன்னரே குறிப்பிட்டிருக்கிறது. இந்த திட்டம் தவிர, புதிய சந்தாதாரர்களைப் பெற விளம்பரங்களுடன் கூடிய குறைந்த சந்தா திட்டத்தையும் சில நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. அந்நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமாக சந்தையாக திகழ்ந்து வருகிறது. மேற்கூறிய எந்தத் திட்டத்தையும் இந்தியாவில் இதுவரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை, அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவிக்கவும் இல்லை. ஆனால், விரைவில் மேற்கூறிய ஏதாவது ஒரு திட்டத்தை இந்தியாவில் அந்நிறுவனம் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.