Loading...
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திபெத் பக்கத்தில் உடைப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும், ஆற்றுப்படுகைகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வு

போதேகோஷி ஆற்றில் ஆய்வு

திபெத் எல்லையில் மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, நேபாள ராணுவக் குழுவினர் எல்லைப் பகுதியான போதேகோஷி ஆற்றுப் பகுதிக்கு விரைந்து சென்று வெள்ளப் பெருக்கின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை லெண்டே மற்றும் போதேகோஷி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ரசுவா மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், புதிய வெள்ள அலை வருமோ என்ற பீதி அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கள நிலவரம்

நேபாளத்தின் தற்போதைய கள நிலவரம்

நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் சேர்த்து பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படாமல் தேடப்பட்டு வருகின்றனர்.

இதுவரை ஆபத்தான மண்டலங்களில் இருந்து 3,253 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது.

மேல் திரிசூலி-1 நீர்மின் திட்ட சுரங்கப்பாதையின் நுழைவு வாயில்கள் சேற்றில் புதைந்துள்ளதால், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆபத்து

20 லட்சம் கன மீட்டர் நீர் ஆபத்து

சீனாவின் நீர்வள அமைச்சகத்தின் தகவலின்படி, எல்லையோரப் பகுதியில் இடிபாடுகளால் உருவான செயற்கை ஏரியில் ஏற்கனவே 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் சேரக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

தற்போது திபெத் பகுதியில் கூடுதலாக ஏற்பட்டுள்ள அணை உடைப்பால், நீர் வேகமாக நேபாளத்தை நோக்கிப் பாய்ந்து வருவதால் கீழ் நதிப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT