Loading...
எல்லை தாண்ட புதிய பயோமெட்ரிக் கார்டு! இந்தியாவிடம் கோரிக்கை வைத்த நேபாள அரசு!
இந்தியாவிற்குப் பயணம் செய்யத் தங்களின் பயோமெட்ரிக் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

எல்லை தாண்ட புதிய பயோமெட்ரிக் கார்டு! இந்தியாவிடம் கோரிக்கை வைத்த நேபாள அரசு!

எழுதியவர் Vasuki
Jul 26, 2026
02:10 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள நாட்டவர்கள் எல்லை தாண்டி இந்தியாவுக்குப் பயணம் செய்ய, தங்களது பயோமெட்ரிக் முறை சார்ந்த தேசிய அடையாள அட்டையை (National ID Card) அதிகாரப்பூர்வ பயண ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு நேபாள அரசு இந்திய அரசிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தின் காத்மண்டு போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தூதரக வழிமுறைகள் மூலம் இந்த முன்மொழிவு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ்போர்ட் அல்லது குடியுரிமை சான்றிதழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கைரேகை, விழித்திரை தகவல்கள் கொண்ட இந்த அட்டையை இந்தியா அங்கீகரித்தால், பாஸ்போர்ட் இல்லாத நேபாள குடிமக்களுக்கு இரு நாட்டு எல்லைப் பயணங்கள் எளிமையாகும்.

புதிய கோரிக்கை

தற்போதைய விதிமுறைகளும் புதிய முன்மொழிவும்

தற்போதுள்ள விதிகளின்படி, நேபாள நாட்டவர்கள் விமானம் மூலம் இந்தியா வரும்போது செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது குடியுரிமை சான்றிழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்திய குடிமக்கள் நேபாளம் செல்ல பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.

நேபாள அரசு தனது நாட்டின் வங்கிச் சேவைகள், பாஸ்போர்ட் பெறுதல் போன்ற அனைத்து பொதுச் சேவைகளுக்கும் குடியுரிமைச் சான்றிதழுக்குப் பதிலாக 'பயோமெட்ரிக் தேசிய அடையாள அட்டையை' கட்டாயமாக்கி வருகிறது. எனவே, இந்திய பயணத்திற்கும் இந்த அடையாள அட்டையை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பானது

பயோமெட்ரிக் NID அட்டையின் சிறப்பம்சங்கள்

நேபாள குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் ராம் சந்திர திவாரி தெரிவித்துள்ள தகவல்கள்:

இந்தத் தேசிய அடையாள அட்டையில் கைரேகை, முக அமைப்பு மற்றும் விழித்திரை (Iris) ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பயோமெட்ரிக் தரவுகளும் அடங்கியுள்ளன.

எதிர்காலத்தில் குடியுரிமை சான்றிதழுக்குப் பதிலாக இந்த ஒரே அட்டை மட்டுமே புழக்கத்தில் இருக்கும். இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் தொழில்நுட்பத்திற்கு உகந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

45 லட்சத்திற்கும் அதிகமான நேபாள குடிமக்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

பயண நடைமுறை

இந்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை

இந்திய தூதரகப் பிரதிநிதிகள் குழு நேபாள குடிவரவுத் துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த முன்மொழிவு குறித்து இந்தியத் தரப்பு நேர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ளதாகவும், இறுதி முடிவிற்காக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே விசா இல்லாத பயண நடைமுறை அமலில் இருக்கும் நிலையில், இந்த பயோமெட்ரிக் அடையாள அட்டை அனுமதி பெற்றால் பாஸ்போர்ட் இல்லாத மக்களுக்கு எல்லை தாண்டிய பயணம் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT