நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நேபாள பிரதமர் பிரசாந்தா பதவி விலகினார்
நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' ஆட்சியமைப்பதற்கான தனது ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) சென்ற வாரம் வாபஸ் பெற்றதை அடுத்து, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவி விலகுகிறார். 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையில் (HoR) பிரசண்டா 63 வாக்குகளை மட்டுமே பெற்றார். பிரேரணைக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குறைந்தபட்சம் 138 வாக்குகள் தேவை.
புதிய பிரதமராக KP சர்மா ஒலி பதவியேற்கவுள்ளார்
முன்னாள் பிரதம மந்திரி கேபி சர்மா ஒலி தலைமையிலான CPN-UML, சபையில் உள்ள மிகப்பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், பிரசண்டா தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவை அக்கட்சி கடந்த வாரம் விலக்கிக் கொண்டது. இதனையடுத்து புதிய ஒப்பந்தத்தின்படி, நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் டியூபா ஏற்கனவே ஒலியை அடுத்த பிரதமராக ஆதரித்துள்ளார். HoR இல் நேபாளி காங்கிரஸ் 89 இடங்களையும், CPN-UML 78 இடங்களையும் பெற்றுள்ளது. அவர்களின் கூட்டு பலமான 167 என்பது கீழ் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 138 ஐ விட அதிகமாகும்