நேபாள வெள்ளப் பெருக்கு: 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பொறியாளர் மரணத்தின் பிடியிலிருந்து தப்பியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தில் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களில் இருவர் 9 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இயந்திரவியல் பொறியாளர் சஞ்சய் சா மற்றும் கபீர் மஹர்ஜன் ஆகிய இருவருக்கும் இந்திய மற்றும் நேபாள மீட்புக் குழுவினர் புதிய வாழ்வை அளித்துள்ளனர். மீட்புக்குப் பின் பேசிய சஞ்சய்,"சுரங்கத்தின் கட்டுப்பாட்டு அறைப் பொறுப்பாளராக நான் இருந்ததால் மற்ற தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக நான் சிக்கிக்கொண்டேன். 170 மீட்டர் ஆழத்தில் உணவோ நீரோ இன்றி, இருளில் சிக்கியிருந்த அந்த 9 நாட்களும் தொடர்ச்சியாக 'ஹரே கிருஷ்ணா மகாமந்திரத்தை' உச்சரித்துக் கொண்டே இருந்தேன்; அதுவே எனக்கு உயிர் வாழும் நம்பிக்கையைத் தந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
மீட்பு
இந்திய மீட்புக் குழுவின் தீவிரப் பங்கு
ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் நெவ்பானே முயற்சியால், சுரங்கத்தின் ஆழத்திலிருந்து மனிதக் குரல்கள் கேட்டதைத் தொடர்ந்து இந்திய நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
சேறும் சகதியுமாக இருந்த சுரங்கப்பாதையை அகற்றி, ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் ராணுவத்தினர் பத்திரமாக வெளியே மீட்டனர்.
கபீர் மஹர்ஜன் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டு அவரது மனைவி ஹீரா சோபா கண்ணீர் மல்க மகிழ்ச்சி தெரிவித்தார்.
திரிசூலி ஆற்றுப் படுகையில் உள்ள 12 நீர்மின் நிலையங்களில் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், இந்த இருவரின் அசாத்திய மீட்பு சம்பவம் எஞ்சியவர்களின் குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.