Loading...
நேபாளத்தில் 600 பள்ளிச் சிறுவர்கள் மாயம்; 1,282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்

நேபாளத்தில் 600 பள்ளிச் சிறுவர்கள் மாயம்; 1,282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
11:37 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்நாட்டின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக உருவான இந்த வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளப் பகுதிகளைப் கடுமையாகப் பாதித்தது. வெள்ளத்தின் காரணமாக இதுவரை 1,282 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தவனில் 359, நுவாகோட்டில் 185, ரசுவாவில் 140 உட்பட பல்வேறு மாவட்டங்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைகளின் கூட்டுப் பிரிவுத் தலைமையகம், இன்னும் கண்டறியப்படாத 4,798 பேரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வெள்ளத்தில் பலர் மாயம்

600 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மாயம்

ரசுவா மாவட்டத்தில் சுமார் 280 மாணவர்களும், நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 மாணவர்களும் காணாமல் போயுள்ளதாகக் கல்வி நிறுவனங்களின் ஆரம்பக் கட்டப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நுவாகோட்டின் பிதுர் நகராட்சியில் மட்டுமே சுமார் 250 குழந்தைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

தொலைத்தொடர்புச் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளதால், காணாமல் போன மாணவர்களின் சரியான எண்ணிக்கையைச் சேகரிப்பதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து 22 ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களும் காணாமல் போயுள்ளனர்.

பள்ளிகள் சேதம்

கல்வி நிறுவனங்களின் சேதம்

கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 பள்ளிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; இதில் 12 பள்ளிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெற்றோர் இல்லாத குழந்தைகளும், குழந்தைகளைத் தேடும் பெற்றொர்களும் தவித்து வரும் சூழல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புச் சேவைகளை சீரமைத்து, காணாமல் போன குழந்தைகளை விரைந்து கண்டறியப் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT