LOADING...
"ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் முற்றிலும் அவசியமானது": NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆதரவு, சீனா கண்டனம்
ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்களுக்கு NATO ஆதரவு

"ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் முற்றிலும் அவசியமானது": NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆதரவு, சீனா கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "முற்றிலும் அவசியமானது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ரூட்டே,"இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ஒரு போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஈரான் அதனை அப்பட்டமாக மீறி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வலுவான பதிலடி கொடுப்பது மிகவும் முக்கியமானது; முற்றிலும் அவசியமானது" என்று கூறினார்.

பதிலடி

ஈரானின் புஷெஹ்ர் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

ஈரானின் அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, தென் ஈரானில் உள்ள புஷெஹ்ர் மாகாணத்தில் உள்ள இரண்டு முக்கிய ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதுகுறித்து புஷெஹ்ர் பாதுகாப்புத் துறை துணை ஆளுநர் கூறுகையில்,"இன்று அதிகாலை வேளையில் தஷ்டி கவுண்டியில் உள்ள ஒரு ராணுவ தளமும், சோகாடக் நகருக்கு அருகில் உள்ள மற்றொரு ராணுவ தளமும் எதிரி நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்டனம்

"போரை மீண்டும் கிளப்ப வேண்டாம்": சீனா கண்டனம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த திடீர் போர் பதற்றம் குறித்து சீனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,"மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான மோதல் போக்கை சீனா கண்டிக்கிறது. இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும். மீண்டும் ஒரு போரைத் தொடங்குவது யாருக்கும் லாபத்தைத் தராது. ராணுவ பலத்தைக் கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது" என எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் மற்றும் ஈரானுக்கான கச்சா எண்ணெய் உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் முடக்கம் ஏற்படக்கூடும்.

Advertisement