பௌத்த மடாலயம் மீது மியான்மர் ராணுவம் குண்டுவீச்சு: 14 பேர் பலி; 20 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
மியான்மரின் மத்தியப் பகுதியான சாகைங் பிராந்தியத்தில் அமைந்துள்ள பௌத்த மடாலயம் ஒன்றின் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகப் பகுதி மக்களும் எதிர்த்தரப்பு அமைப்பினரும் தெரிவித்துள்ளனர். சாகைங் பிராந்தியத்தில் உள்ள மியாவ்ங் நகரியத்திற்கு உட்பட்ட சுவெல் லே ஓ கிராமத்தில் இயங்கி வரும் மடாலயத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தியானப் பயிற்சி
தியானப் பயிற்சியின் போது விழுந்த குண்டுகள்
மடாலய வளாகத்தில் ஒரு வாரம் தொடர்ச்சியாக நடைபெறும் பிரத்யேக ஆன்மீக தியானப் பயிற்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராணுவத்தின் அதிநவீன போர் விமானம் ஒன்று, மடாலய வளாகத்திற்குள் நேரடியாகக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
ஆன்மீக அமைதி நிலவிய இடத்தில் திடீரென நடந்த இந்த ரத்தவெறித் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆயுதப் போராட்டங்கள்
தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள்
மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே ஜனநாயக ஆதரவுப் படைகளுக்கும், இனக்குழு ஆயுதக் குழுக்களுக்கும் மற்றும் ராணுவ ஆட்சிக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.
குறிப்பாக சாகைங் பிராந்தியம் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்களின் முக்கியக் கோட்டையாக விளங்கி வருகிறது.
கிளர்ச்சியாளர்களை அடக்குவதாகக் கூறி, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள்
பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் ராணுவம்
போரில் நேரடியாக ஈடுபடாத அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற வான்வழித் தாக்குதல்கள் மியான்மரில் தொடர்க கதையாகி வருகின்றன.
வழிபாட்டுத் தலமான பௌத்த மடாலயத்தைக் கூட விட்டுவைக்காமல், தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டிருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.