மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மாஸ்கோவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று மார்ச் மாதமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தை எச்சரித்ததாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது குறித்து ஏற்கனவே ரஷ்யாவை எச்சரித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. "மாஸ்கோவில் திட்டமிட்ட பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்தது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்த அமெரிக்கா
"அமெரிக்க அரசாங்கம் தனது 'எச்சரிக்கை கடமை' கொள்கையின்படி ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டது," என்று வாட்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உருமறைப்பு சீருடை அணிந்திருந்த தாக்குதல்காரர்கள் கச்சேரி அரங்கத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டே, வெடிகுண்டுகளையும் தீக்குண்டுகளையும் வீசினர். அந்த அரங்கமே தீப்பிழம்பாகவும் கறுப்பு புகையாகவும் இருப்பதை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. அதன் பிறகு, மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல ஆயிரம் பேர் தங்கக்கூடிய அந்த மாபெரும் கச்சேரி அரங்கில் தண்ணீரைக் கொட்டி, தீயை அணைக்க முயற்சிகள் நடந்தன. நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.