அமெரிக்கா - ஈரான் போர் அபாயம்: போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பிரயோகிக்கும் வகையில் மிகப்பெரிய போர்க்கப்பல் படையை (Armada) மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "எங்கள் கடற்படை ஈரான் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதை ஒரு போர் அறிவிப்பாகக் கருத வேண்டாம்; இது ஒரு எச்சரிக்கை மட்டுமே" என்றார். மேலும், ஈரான் மீண்டும் அணுசக்தித் திட்டங்களை தொடங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கண்டனம்
அமெரிக்காவின் செயலுக்கு ஈரானின் பதிலடி
அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தளபதி முகமது பாக்பூர் கூறுகையில், "எங்கள் விரல்கள் துப்பாக்கியின் விசையில் உள்ளன. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தவறான கணக்குப் போட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் அனைத்தும் தகர்க்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். மறுபுறம், ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. ஈரானில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் குறித்த துல்லியமான விபரங்களைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த அதிகாரப் போட்டி, மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.