கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா
சீனாவும் இந்தியாவும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வரிசையாக எதிர் நாட்டு நிருபர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், சீனாவில் உள்ள கடைசி இந்தியப் பத்திரிகையாளர் இந்த மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என சீன அரசு கேட்டு கொண்டுள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிருபரை இந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த இந்திய நிருபர் வெளியேறிவிட்டால், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தில் இந்திய ஊடகவியலாளர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் நான்கு இந்திய நிருபர்கள் இருந்தனர்.
இது குறித்த கேள்விகளுக்கு இரு நாடுகளும் பதிலளிக்கவில்லை
அங்கு இருந்த 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நிருபர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும், 'பிரசார் பாரதி' மற்றும் 'தி இந்து' பத்திரிகைகளை சேர்ந்த இரண்டு இந்திய பத்திரிகையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சீனாவிற்கான விசா மறுக்கப்பட்டது. சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. இந்தியாவில் இன்னும் ஒரு சீனப் பத்திரிகையாளர் எஞ்சியிருப்பதாகவும், ஆனால் அவருக்கு இன்னும் விசா புதுப்பிக்கப்படவில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கடந்த மாதம் கூறி இருந்தார். இதற்கு முன்னதாக, 'சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி' மற்றும் 'சீனா சென்ட்ரல் டெலிவிஷன்' ஆகிய இரு செய்தி நிறுவனங்களை சேர்ந்த சீன பத்திரிகையாளர்களின் விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு நிராகரித்தது.