
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து: கிராண்ட் முப்தி அலுவலகம் தகவல்
செய்தி முன்னோட்டம்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது" என்று முஸ்லியாரின் அலுவலகம் செய்தி நிறுவனமான ANI மேற்கோளிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் இந்த வளர்ச்சியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் கிராண்ட் முப்தியின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Indian Grand Mufti, Kanthapuram AP Abubakker Muslaiyar’s office says, "The death sentence of Nimisha Priya, which was previously suspended, has been overturned. A high-level meeting held in Sanaa decided to completely cancel the death sentence that was temporarily suspended… https://t.co/tD1NVQtM9C
— ANI (@ANI) July 29, 2025
நிறுத்தி வைப்பு
நிறுத்தி வைக்கப்பட்ட மரண தண்டனை
முன்னதாக ஏமனில் நிமிஷாவின் மரணதண்டனை ஜூலை 16 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக கிராண்ட் முப்தி ஏபி அபுபக்கர் முஸ்லையர் ஏமன் அதிகாரிகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பலகட்ட அரசியல் தலையீடுகளும், மதகுருமார்களின் தலையீட்டிற்கு பின்னர், தேதி குறிப்பிடாமல் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்
நிமிஷா பிரியாவின் இந்த தண்டனைக்கு காரணம்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான செவிலியரான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் ஒரு பிசினஸ் டீல் ஏற்படுத்தினார். இருவரும் தலைநகர் சனாவில் ஒரு மருத்துவமனையைத் திறக்க திட்டமிட்டிருந்தனர். அந்நாட்டு சட்டப்படி கணவர் மனைவியாக இருந்தால் மட்டுமே சேர்ந்து வணிகம் செய்யமுடியும். எனவே அவர்கள் போலியாக திருமணம் செய்து கொண்டு, சான்றிதழ் பெற்று மருத்துவமனையை தொடங்க முடிவு செய்தனர். எனினும் மஹ்தி இதை பயன்படுத்தி அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து, அவர் இந்தியாவுக்குத் திரும்பும் வாய்ப்பையும் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.
கொலை
தொடர் துன்புறுத்தல் காரணமாக கொலை
ஏமன் அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரியா 2017ஆம் ஆண்டு மஹ்தியை மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க முயன்றார். சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், மஹ்தி மரணமடைந்தார். இதன் தொடர்ச்சியாக நிமிஷா பிரியா 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கொலைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி அவரது மரணதண்டனைக்கு ஒப்புதல் அளித்த பிறகு, கடந்த சில மாதங்களாக அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமடைந்தன. ஹவுத்தி தலைவர் ஜனவரி 2025இல் அதற்கு ஒப்புதல் அளித்தபோது இந்த விவகாரம் தீவிரமடைந்தது. இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் "ஒருங்கிணைந்த முயற்சிகளைத்" தொடர்ந்து அவரது மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டது.