ரஷ்யாவில் காவலில் வைக்கப்பட்ட கான்பூர் பொறியாளர்: ராணுவத்தில் சேர வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா மாஸ்கோவில் காவல் துறையினரால் சட்டவிரோதமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி சினேகா குப்தா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார். தன் கணவரை ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாக அஞ்சுவதாகக் கூறியுள்ள அவர், அவரை பாதுகாப்பாக இந்தியா மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கைது
மாஸ்கோவில் காவல் மற்றும் குடும்பத்தின் தவிப்பு
நொய்டாவில் இயங்கும் தனியார் நிறுவன பணிக்காக பணி விசா மூலம் ரஷ்யா சென்ற சந்தன் குப்தா, எவ்வித தவறும் செய்யாத நிலையில் மாஸ்கோ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய மொழி தெரியாத நிலையில், 10 வயது மகனுடன் மாஸ்கோவில் தவித்து வரும் சினேகா, தன் கணவருக்கு என்ன நடக்கிறது என்பதைக்கூட அறிய முடியாமல் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்.
உக்ரைன் போரில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக, வெளிநாட்டினரைக் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும், அதற்காகவே தன் கணவர் மீது அழுத்தம் தரப்படுவதாகவும் சினேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும், அவரது கைதுக்கான அதிகாரப்பூர்வக் காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான அறிக்கையும் வெளியாகவில்லை.
நடவடிக்கை
இந்திய தூதரகத்தின் பதில் நடவடிக்கை
இவ்விவகாரம் தொடர்பாகத் சமூக வலைதளங்களில் சினேகா வெளியிட்ட வீடியோ வைரலானதை அடுத்து, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் இது ஒரு சட்டப்பூர்வமான விசாரணை சார்ந்த விவகாரம் என்றும், தூதரகக் கண்காணிப்பு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய அரசிடமிருந்தும் ரஷ்ய நிறுவனத்திடமிருந்தும் முறையான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில், தன் கணவர் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்ப தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினேகாவின் ஒரே கோரிக்கையாக உள்ளது.